4745.

மொய்யுறுசெவிகள் தாவி,
     முதுகுஉற,முறைகால் தள்ள,
மைஅறு விசும்பினூடு
     நிமிர்ந்தவாலதிய, மஞ்சின்
மெய்உறத்தழீஇய, மெல்லென்
     பிடியொடும்வெருவ லோடும்
கையுற மரங்கள்சுற்றி,
    பிளிறின-களிநல் யானை.
 

     களிநல் யானை- மதமயக்கமுடைய பெரிய யானைகள்; மைஅறு
விசும்பினூடு
- மேகம் இல்லாத ஆகாயத்தின்கண்; நிமிர்ந்த வாலதிய -
நீண்ட வாலையுடைய (யானைக் கன்றுகள்); மொய்உறு செவிகள் - வலிமை
மிக்க காதுகள்;
தாவி முதுகுற - பரவி முதுகைச்சார (அதனால்); முறைகால்
தள்ள
-பருவக்  காற்று வீச; மஞ்சின் மெய்யுறத் தழீஇய - மேகத்தைப்
போல(த்தம்) உடம்பைத் தழுவிக் கொண்ட; மெல்லென் பிடியொடும் -
மென்மையான பெண் யானைகளுடன்; வெருவலோடும் - அச்சத்தோடும்;
கைஉற மரங்கள் சுற்றி - கைகளால் மரங்களைச் சுற்றிக் கொண்டு; பிளிறின
- வீறிட்டுக் கதறின.

     யானை, கன்று,பிடியுடன் அச்சத்தோடு மரங்களைப் பற்றிப் பிளிறின.
வாலதிய - வாலையுடைய கன்று. வாலதி - வால். அ - உடைமைப்
பொருளைக்குறித்தது. வாலதிய என்னும் பலவின்பால் வினைமுற்று
வினையாலணையும் பெயராயிற்று.                                  (5)