4751. | வெயில்இயல் குன்றம் கீண்டு வெடித்தலும், நடுக்கம் எய்தி, மயில்இயல்தளிர்க்கை மாதர் தழீஇக்கொளப் பொலிந்த வானோர், அயில் எயிற்றுஅரக்கன் அள்ளத் திரிந்தநாள், அணங்கு புல்லக் கயிலையில் இருந்த தேவைத் தனித் தனிகடுத்தல் செய்தார். |
வெயில்இயல்குன்றம் - ஒளியமைந்த மகேந்திர மலை; கீண்டு வெடித்தலும் - பிளவுபட்டு இரண்டாதலும்; மயில்இயல் தளிர்க்கை மாதர் -மயில் போன்ற சாயலும், தளிர் போன்ற கைகளும் கொண்ட தெய்வப் பெண்கள்; நடுக்கம் எய்தி தழீஇக் கொள்ள - அச்சமுற்றுத் தழுவிக்கொள்ள (அதனால்); பொலிந்த வானோர் - பூரித்த தேவர்கள்; அயில் எயிற்று அரக்கன் - கூரிய பற்களைப் பெற்ற இராவணன்; அள்ள - பெயர்த்தெடுக்க; திரிந்த நாள் - (கயிலாய மலை) அசைந்த காலத்தில்; அணங்குபுல்ல - உமாதேவி தழுவிக்கொள்ள; கயிலையில் இருந்த தேவை - கயிலாய மலையில்வீற்றிருந்த சிவபிரானை; தனித்தனி கடுத்தல் செய்தார் - ஒவ்வொருவரும்தனித்தனியே ஒத்திருந்தார்கள். தத்தம்தேவிமாரால் தழுவப்பெற்ற தேவர்கள் உமையம்மை தழுவக் கயிலாய மலையில் மகிழ்ந்த சிவபிரானை ஒத்திருந்தனர். வெயில் - ஒளி - வெயில்விரி கனகக் குன்றத்து எழில் கெட - (கம்பன் - மிகை 226) (11) |