4752. | ஊறியநறவும் உற்ற குற்றமும்உணர்வை உண்ண, சீறிய மனத்தர்,தெய்வ மடந்தையர்ஊடல் தீர்வுற்று ஆறினர்,அஞ்சுகின்றார், அன்பரைத்தழுவி உம்பர் ஏறினர், இட்டு,நீத்த பைங்கிளிக்கு இரங்குகின்றார். |
ஊறிய நறவும் -(வியஞ்சனத்துடன்) ஊறிக்கிடந்த மதுவும்; உற்ற குற்றமும் - நேர்ந்த பிழையும்; உணர்வை உண்ண - அறிவை அழிக்க (அதனாலே); சீறிய மனத்தர் - கொதிப்புற்ற மனத்தையுடைய; தெய்வ மடந்தையர் - தேவலோகப் பெண்கள் (மலையின் அதிர்ச்சியால்); ஊடல் தீர்வுற்று ஆறினர் - ஊடல் நீங்கி அமைதியடைந்தனர்; அஞ்சுகின்றார் - அச்சம் அடைந்து; அன்பரைத் தழுவி - கணவரைத் தழுவிக்கொண்டு; உம்பர் ஏறினர் - விண்ணின் கண்ணே சென்று; இட்டு நீத்த - கூண்டுக்குள் அடைத்து விட்டு விட்டுவந்த; பைங்கிளிக்கு - இளமையான கிளியின் பொருட்டாக; இரங்குகின்றார் - கவலைப்படுகிறார்கள். கூட்டுக்குள்செறிக்காமல் இருந்தால் கிளி பறந்து சென்று பிழைக்குமே, பறக்கவியலாதபடி அடைத்தோமே என்று வருந்தியதை இட்டு நீத்த என்னும் தொடர் உணர்த்தும். மலையின் அசைவால் ஊடல் துன்பம் போயிற்று. இட்டு நீத்த பைங்கிளியால் வந்த துன்பம் வளர்ந்தது. பிராட்டிகூடத் தான் விட்டுவந்த கிளியைப் பாதுகாக்கும்படி தன் சகோதரிகட்குக் கூறும்படி சுமந்திரனிடம் கூறினாள். 'இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி' என்னும் ஐங்குறுநூற்றுப் பாடல் (375) மகளிர் கிளிகள்பால் கொண்ட பாசத்தைப் புலப்படுத்தும். பைங்கிளி - இளங்கிளி; பசுமை - இளமை. பசுங்கதிர்க் கொத்தொடு (தக்க பரணி 605) என்னும் தொடருக்கு விளக்கம் கூறும்போது பசுங்கதிர் - பச்சைக் கதிர். பசுமை நிறத்திற் சென்றதன்று. இளமையிற் சென்றது, என்று தெளிவித்தது ஈண்டும் ஏற்கும். பாரதிகூட 'பச்சைக் குழந்தை' என்பார். 'பச்சைப் பிள்ளை' எனப் பேச்சு வழக்கிலும் இளங்குழந்தை குறிக்கப்படுவதை நினைவிற் கொள்க. (12) |