4753.

இத்திறம் நிகழும் வேலை,
     இமையவர், முனிவர், மற்றும்
முத் திறத்து உலகத்தாரும்,
     முறை முறை விரைவில் மொய்த்தார்,
தொத்துஉறு மலரும், சாந்தும்
     சுண்ணமும் இனைய தூவி,
'வித்தக சேறி' என்றார்
     வீரனும் விரைவது ஆனான்.
 

     இத்திறம்நிகழும் வேலை - இப்படிப்பட்டநிகழ்ச்சிகள் நடைபெறுங்
காலத்தில்; இமையவர் முனிவர் மற்றை முத்திறத்து உலகத்தாரும் -
தேவர்களும், முனிவர்களும் இன்னும் மூவகையான உலகத்தில்
இருப்பவர்களும்; முறை முறை - தகுதிக்கேற்ற வரிசைப்படி; விரைவில்
மொய்த்தார் -
விரைவாக ஆகாயத்தில் ஒன்று கூடினர்; கொத்து உறுமலரும்- கொத்துக் கொத்தான பூக்களையும்; சாந்தும் - சந்தனத்தையும்; சுண்ணமும்- வாசனைப் பொடிகளையும்; இனைய - இப்படிப்பட்ட
பொருள்களையும்;தூவி - (அனுமன் திருமேனியில்) அள்ளி வீசி; வித்தக -
அறிஞனே!; சேறிஎன்றார் - 'செல்க!' என்று கூறினார்கள்;
வீரனும்
விரைவது ஆனான்-
அனுமனும்வேகமாகப் போக முற்பட்டான்.

     இதுவரை அனுமன்திருவடி அழுத்திய காரணத்தால் மலையின்கண்
நிகழ்ந்தவற்றைக் கவிச்சக்கரவர்த்தி விவரித்தார்.                   (13)