4754. | 'குறுமுனிகுடித்த வேலை குப்புறும்கொள்கைத்து ஆதல் வெறுவிது;விசயம் வைகும் விலங்கல்-தோள் அலங்கல் வீர ! 'சிறிதுஇது' என்றுஇகழற்பாலை அல்லை; நீசேறி' என்னா; உறுவலித் துணைவர்சொன்னார்; ஒருப்பட்டான்; பொருப்பை ஒப்பான். |
உறுவலித் துணைவர்- மிக்கவலிமையையுடைய நண்பர்கள் (அனுமனை நோக்கி); விசயம் வைகும் - வெற்றி குடிகொண்ட; விலங்கல்தோள் அலங்கல்வீர - மலைபோன்ற தோளில் மாலையணிந்த வீரனே !; குறுமுனி குடித்த வேலை - அகத்திய முனிவனால் பருகப்பட்ட இந்தக் கடல்; குப்புறும் கொள்கைத்தாதல் - பாய்ந்து கடக்க வேண்டிய கோட்பாட்டுக்கு உரிய பொருளாயிருத்தல்; வெறுவிது - மதிக்கத் தகாதது (பயனற்றது); இது சிறிது - இந்தக் கடல் (என் வலிமைக்கு) அற்பம்; என்று இகழற்பாலையல்லை - என்று இக் கடலை அவமதிக்கும் பான்மையை அடையாதே; நீ சேறி - நீ செல்வாயாக; என்னா - என்று; சொன்னார் - கூறினார்கள் (அம்மொழி கேட்டு); பொருப்பை ஒப்பான் - மலையை ஒத்த அனுமான்; ஒருப்பட்டான் - (அவர்கள் சொற்களுக்கு) உடன் பட்டான். 'பேருருக் கொண்டஎன் ஆற்றலுக்குக் குறுமுனி குடித்த கடல் அற்பம்' என்று நீ கருதாது செல்க என்று துணைவர்கள் கூறினார்கள். அவர்கள் மொழிகட்கு அனுமன் உடன் பட்டான். குறுமுனி - அகத்தியர். குப்புறுதல் - பாய்ந்து கடத்தல். (14) |