4756.

வால்விசைத்து எடுத்து, வன்தாள்
     மடக்கி,மார்பு ஒடுக்கி, மானத்
தோள் விசைத்துணைகள் பொங்கக்
     கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்
கால்விசைத்தடக்கை நீட்டி,
     கண்புலம்கதுவா வண்ணம்
மேல்விசைத்துஎழுந்தான், உச்சி
   விரிஞ்சன்நாடு உரிஞ்ச - வீரன்.

     வீரன் - அனுமன்;வால்விசைத்து எடுத்து - வாலை வேகமாக
உயர்த்தி; வன்தாள் மடக்கி - வலிமையான திருவடிகளை மடக்கி; மார்பு
ஒடுக்கி -
மார்பைச் சுருக்கி; மானத் தோள்விசைத் துணைகள் பொங்க -
பெருமையும் புகழும் வெற்றியும் பெற்ற இரண்டு புயங்கள் பூரிக்க;
கழுத்தினைச் சுருக்கி -
கழுத்தை ஒடுக்கி; தூண்டும் கால்விசைத் தடக்கை
நீட்டி -
தூண்டுகின்ற காற்றைப் போன்று வேகமாகக் கைகளை நீட்டி; உச்சி
விரிஞ்சன் நாடு உரிஞ்ச -
தலை பிரம்ம லோகத்தை உராயும்படி; கண்புலம்
கதுவா வண்ணம் -
கண்ணின் பார்வை பற்ற முடியாதபடி; மேல் விசைத்து
எழுந்தான் -
விண்ணில் வேகமாக எழும்பினான்.

     அனுமன் வால்எடுத்து, தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, கழுத்தினைச்
சுருக்கி, கை நீட்டி உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச விசைத்து எழுந்தான். கடல்
கடக்க எழுந்த அனுமனின் மெய்ப்பாடு விளக்கப்படுகிறது. விசையம் என்னும்
சொல் அம் சாரியை குறைந்து வந்துள்ளது. வன்மை என்றும் வேகம் என்றும்
கூறலாம்.                                               (16)