4759.

மாவொடு மரனும், மண்ணும்,
     வல்லியும்,மற்றும் எல்லாம்
போவது புரிந்தவீரன்
    விசையினால், புணரி போர்க்கத்
தூவின; கீழும்மேலும்
     தூர்த்தன;சுருதி அன்ன
சேவகன் சீறாமுன்னம்
     சேதுவும் இயன்ற மாதோ !

     போவது புரிந்தவீரன் விசையினால் - இலங்கை நோக்கிச்சென்ற
அனுமனின் வேகத்தால்; மாவொடு மரனும் மண்ணும் - விலங்குகளும்
மரங்களும் வேரடிமண்ணும்; வல்லியும் மற்றும் எல்லாம் - கொடியும் பிற
பொருள்களும்; புணரி போர்க்க - கடல் மூடும்படி; தூவின - தூவப்
பெற்றன; மேலும் கீழும் தூர்த்தன - கடலின் மேலும் ஆழத்திலும்
தூர்க்கப்பட்டன; சுருதி அன்ன -
வேதம் போன்ற;சேவகன் சீறா முன்னம்
-
இராமபிரான் கடலைச் சீறுவதற்குமுன்பு; சேதுவும் இயன்ற - சேதுவும்
அமைந்தது.

     அனுமன் பின்சென்ற மரம் முதலான பொருள்கள் வீழ்ந்து கடல்
மேடாயிற்று. அது அணைபோல் இருந்தது. 'அனுமன் சென்ற விசையால் மரம்
முதலியன கடலில் ஆங்காங்கு விழுந்திருப்பவை, இராமபிரான் இனிக் கட்டப்
போகின்ற சேதுவுக்காக நூல் பிடிப்பதற்கு நாட்டிய முளைகள் போலும்' என
சம்பூ ராமாயணத்தில் இச் செய்யுளினும் சிறிது கருத்து வேறுபடக் கூறியுள்ளது
என்று வை.மு.கோ. குறிப்பிடுவார். இயன்றது என்பது ஈறுகெட்டு இயன்ற என
நின்றது. சேது ஒன்றேயாதலின் பன்மை முடிபு ஏலா. ஒருமை பன்மை மயக்கம்
என்று கூறின், ஏற்பார் ஏற்க.                                 (19)