வெய்தின்வான் சிறையினால் நீர் வேலையைக்கிழிய வீசி, நொய்தின்ஆர்அமுதம் கொண்ட நோன்மையேநுவலும் நாகர், 'உய்தும் நாம்என்பது என்னே ? உறுவலிக்கலுழன் ஊழின் எய்தினான் ஆம்'என்று அஞ்சி, அலக்கண்உற்று, இரியல் போனார்.
வான்சிறையினால் - பெரிய சிறகுகளாலே;நீர் வேலையை - நீர்நிரம்பிய கடலை; வெய்தின் கிழிய வீசி - வேகமாகப் பிளவு படும்படி வீசி;நொய்தின் - எளிதாக; ஆரமுதம் கொண்ட - அருமையான அமுதத்தைக்கவர்ந்த (கருடனின்); நோன்மையே நுவலும் - வலிமையைப் பேசிக்கொண்டிருக்கும்; நாகர் - நாகலோக வாசிகள்; உறுவலிக் கலுழன் - மிக்கவலிமையுடைய கருடன்; ஊழின் எய்தினான் ஆம் - நம்முடைய தீயூழால்(மறுபடியும்) வந்து சேர்ந்தான் ஆகும்; நாம் உய்தும் என்பது என்னே -நாம் தப்பிப் பிழைப்போம் என்று கூறுவது எப்படி?; என்று அஞ்சி - என்றுகூறி பயந்து; அலக்கண் உற்று - பெருந்துயர் அடைந்து; இரியல் போனார்- சிதறி ஓடினார்கள். எய்தினன் ஆம்என்பதில் உள்ள ஆம் அசை. (21)