வானில் செல்லும்அனுமன் தோற்றம்
4763.

இடுக்கு உறுபொருள்கள் என்ஆம் ?
     எண்திசைசுமந்த யானை
நடுக்குஉறவிசும்பில் செல்லும்
     நாயகன்தூதன், நாகம்
ஒடுக்குறு காலை,வன்காற்று
    அடியொடும்ஒடித்த அந்நாள்,
முடுக்குறக்கடலில் செல்லும்
    முத்தலைக்கிரியும் ஒத்தான்.

     எண்திசை சுமந்தயானை - எட்டுத் திசைகளையும் தாங்கும்
யானைகள்; நடுக்குற - நடுக்கம் அடையும்படியாக;  விசும்பில் செல்லும்
நாயகன் தூதன் -
ஆகாயத்திற் பறந்து செல்லும் இராம தூதனான அனுமன்;
நாகம் ஒடுக்குறு காலை -
ஆதிசேடன் மேருமலையைத் தன் படங்களில்
ஒடுக்கிக் கொண்ட சமயத்தில்; வன்காற்று - கொடுங்காற்று; அடியொடும்
ஒடித்த அந்நாள் -
அடியொடு முறித்த அக்காலத்தில்; முடுக்குறக் கடலில்
செல்லும் -
வேகமாக உந்தப்படத் தென் கடலின்கண் போகும்; முத்தலைக்
கிரியும் ஒத்தான் -
மூன்று தலைகளைப் பெற்ற திரிகூட மலையையும்
ஒத்திருந்தான் (என்றால்); இடுக்குஉறு - அவன் போகும் வழி இடையிலுள்ள;
பொருள்கள் என்னாம் -
என்ன பாடுபடும்.

     நாகம் - பாம்பு(ஆதிசேடன்) அனுமனின் இரண்டு தோள்களும்
தலையும் - முத்தலைச் சிகரம் போன்றிருந்தன. ஆதிசேடனும் வாயுதேவனும்
தங்கள் வலிமையை நிலைநிறுத்த மேற்கொண்ட வஞ்சினப்படி
ஆதிசேடன்மேருமலையைத் தன்னுடைய ஆயிரம் படங்களால்
மூடிக் கொண்டான். வாயுதேவன் மலையை அசைத்துப் பார்த்தான். தேவர்கள்
வேண்டிக்கொள்ள சேடன் தன்னுடைய மூன்று படங்களை உயர்த்த
வாயுதேவன் மூன்று சிகரங்களைக் கடலில் இட்டான்.               (23)