4764.

கொட்புறுபுரவித் தெய்வக்
     கூர்நுதிக்குலிசத்தாற்கும்,
கண்புலன் கதுவல்ஆகா
    வேகத்தான், கடலும் மண்ணும்
உட்படக்கூடிஅண்டம்
     உறஉளசெலவின், ஒற்றைப்
புட்பகவிமானம்தான் அவ்
     இலங்கைமேல் போவது ஒத்தான்.

     கொட்புறு புரவி -சுழன்றுசுழன்று செல்கின்ற குதிரைமேல் உள்ள;
தெய்வக் கூர்நுதி - தெய்வத் தன்மை பெற்ற கூரிய நுனியையுடைய;
குலிசத்தாற்கும் - வச்சிராயுதத்தை ஏந்திய இந்திரனுக்கும்; கண்புலன் கதுவல்
ஆகா வேகத்தான் - கண்ணின் பார்வை பின்பற்ற முடியாத வேகமுடைய
அனுமன்; கடலும் மண்ணும் - கடலும் கடலாற் சூழ்ந்த உலகமும்;
உட்படக்கூடி - தன்னுள் ஒடுங்கும்படி (பேருருக் கொண்டவனாய்); அண்டம்
உற உள
- அண்டத்தின் உச்சியானது மோதும்படி; செலவின் - செல்கின்ற
பயணத்தால்; ஒற்றைப் புட்பக விமானம் - ஒப்பற்ற புட்பக விமானம்;
இலங்கைமேல் போவது ஒத்தான் - இலங்கை மாநகருக்குப் போவதை
ஒத்திருந்தான்.

     இந்திரனின்பார்வைக்கும் எட்ட முடியாத வேகமுடைய அனுமன்,
புட்பகவிமானம் இலங்கைக்குப் போவதைப் போன்றிருந்தான். கடலும் உலகும்
தன்னுள் அடங்கும்படி பேருருக் கொள்வதால் புட்பக விமானம்போல்
அனுமன் இருந்தான். விமானம் எவ்வளவு மக்கள் வந்தாலும் விரியும். "
அண்டம் உறவுள செலவின்" அநேக அண்டங்கள்வைத்தாலும் கடக்கும்
செலவு என்பது பழைய உரை.                                   (24)