4765.

விண்ணவர்ஏத்த, வேத
     முனிவரர்வியந்து வாழ்த்த,
மண்ணவர்இறைஞ்ச செல்லும்
     மாருதி, மறம்உள் கூர,
'அண்ணல்வாள்அரக்கன் தன்னை
    அமுக்குவென்'இன்னம் என்னாக்
கண்ணுதல் ஒழியச்செல்லும்
     கைலைஅம்கிரியும் ஒத்தான்.

     விண்ணவர் ஏத்த- தேவர்கள் போற்றவும்; வேத முனிவர் வியந்து
-வேதங்களை அறிந்த சிறந்த முனிவர்கள் வியப்புற்று; வாழ்த்த -
வாழ்த்தவும்;மண்ணவர் இறைஞ்ச - மண்ணுலக்கத்தவர் வணங்கவும்;
செல்லும் மாருதி - போகும் அனுமான்; உள் மறம் கூர - உள்ளத்தே
(இராவணன் மேல்) கோபம்மிகுதியாவதால்; அண்ணல் வாள் -
பெருமிதமுடைய கொடிய; அரக்கன்தன்னை - இராவணனை; இன்னும்
அமுக்குவென்
- மறுபடியும்அழுத்துவேன்; என்னா - என்று கருதி;
கண்ணுதல் ஒழிய - சிவபிரான்இல்லாமல்; செல்லும் - தனித்துப் போகின்ற;
கைலைஅம் கிரியும் - கயிலாயமலையையும் ; ஒத்தான் - ஒத்திருந்தான்.

     வெண்ணிறமுடையஅனுமன் இராவணன் மேல் கொண்ட சீற்றம்
அதிகரிக்க அவனை  அமுக்கச் செல்லும் கயிலாயம் போன்றிருந்தான். மறம் -
சினம். கைலைஅம்கிரி - அம் சாரியை.                             (25)