4767.

மழைகிழித்து உதிர மீன்கள்
     மறிகடல்பாய, வானம்
குழைவுற, திசைகள்கீற
     மேருவும்குலுங்க, கோட்டின்
முழையுடைக்கிரிகள் முற்ற
     முடுக்குவான், முடிவுக்காலத்து
அழிவுறக்கடுக்கும் வேகத்
    தாதையும்அனையன் ஆனான்.

     மழைகிழித்துஉதிர - மேகத்தைப் பிளந்துகொண்டு உதிரும்படி;
மீன்கள் - நட்சத்திரங்கள்; மறிகடல் பாய - அலைகள் மடங்கும் கடலிலே
பாயவும்; வானம் குழைவுற - ஆகாயம் நெகிழ்ச்சியடையவும்; திசைகள் கீற
- திக்குகள் கிழிபடவும்; மேருவும் குலுங்க - மேருமலையும் அசையவும்;
கோட்டின் முழை உடைக் கிரிகள் முற்ற - சிகரங்களில் குகைகளை
உடையமலைகள் நீரால் சூழப் பெறவும்; முடுக்குவான்  - வேகமாகச்
செல்லும்அனுமன்; முடிவுக் காலத்து - ஊழிக் காலத்தில்; அழிவுறக்
கடுக்கும்
-யாவும் அழிந்துபடச் சினந்து செல்கின்ற; வேகத் தாதையும்
அனையன்ஆனான்
- வேகத்தையுடைய (தன்) தந்தையான வாயுதேவனைப்
போலவும்இருந்தான்.

     வான் வெட்டவெளியன்று. வெளியில் உள்ள நுண்ணிய பூதம். இது
காற்றினும் நுட்பமானது. வானத்தை வெறும் வெளியாகக் கருதியவர்கள்
அதற்குக் குழைவு இன்மையின் வான் என்பதற்கு விண்ணுலகு எனப் பொருள்
கொண்டனர்.                                              (27)