4771. 

அடல்உலாம்திகிரி மாயற்கு
    அமைந்ததன் ஆற்றல் காட்ட,
குடல் எலாம்அவுணர் சிந்த,
     குன்றுஎனக்குறித்து நின்ற
திடல் எலாம்தொடர்ந்து செல்ல,
    சேண்விசும்பு ஒதுங்க, தெய்வக்
கடல் எலாம்கலங்க, தாவும்
     கலுழனும் அனையன் ஆனான்.*
 

     அடல்உலாம்திகிரி மாயற்கு - (அனுமன்) பகைவரைஅடக்குவதில்
மிக்க வல்லமை பரவிய சக்கரப்படை ஏந்திய திருமாலுக்கு; அமைந்த தன்
ஆற்றல்காட்ட
- அடங்கிய தன்னுடைய வன்மையைக் காண்பிக்க; அவுணர்
எலாம் குடல் சிந்த
- எல்லா அசுரர்களும் குடல் கலங்கவும்; குன்று எனக்
குறித்து நின்ற
- மலை என்று பேசப்பட்டு நிமிர்ந்து நிற்கின்ற; திடல் எலாம்
தொடர்ந்து செல்ல
- மேடுகள் யாவும் தொடர்ந்து போகவும்; விசும்பு சேண்
ஒதுங்க
- ஆகாயம் தூரத்தில் ஒதுங்கிக் கொள்ளவும்; தெய்வக் கடல் எலாம்
கலங்க
- தெய்வத் தன்மையுடைய எல்லாச் சமுத்திரங்களும் கலங்கவும்;
தாவும் கலுழனும் - பறந்து சென்ற கருடனையும்; அனையன் ஆனான் -
ஒத்தவன் ஆனான்.

     அனுமன் -தோன்றா எழுவாய். சக்கரப்படை ஏந்திய திருமாலுக்குத்
தன்னுடைய வலிமையைக் காட்டப் பறந்து சென்ற கருட பகவானைப்போல
அனுமன் விளங்கினான்.                                   (31)