4773.

விளித்துப்பின் வேலை தாவும்
     வீரன்வால், வேதம் எய்க்கும்
அளி, துப்பின் அனுமன் என்னும்
     அருந்துணைபெற்றதாயும்,
களித்துப் புன்தொழில்மேல் நின்ற
     அரக்கர்கண் ணுறுவர் என்ன
ஒளித்து, பின்செல்லும் கால
     பாசத்தைஒத்தது அன்றே.

     விளித்துப் பின்வேலை தாவும்- அறைகூவி பிறகு கடலைத்
தாவுகின்ற; வீரன்வால் - வீரனுடைய வாலானது; வேதம் எய்க்கும் -
வேதங்களை அறிந்துள்ள; அளி துப்பின் அனுமன் என்னும் -
கருணையையும் உற்சாகத்தையும் உடைய அனுமனாகிய; அருந்துணை
பெற்றதாயும்
- அரிய உதவியை அடைந்ததாய்; களித்துப்புன்  தொழில்மேல்நின்ற அரக்கர் - கள்ளுண்டு களித்து, அற்பத் தொழிலை
மேற்கொண்டஅரக்கர்கள்; கண்ணுறுவர் என்ன - கண்டு கொள்வார்களோ
என்று கருதி;ஒளித்து பின் செல்லும் - மறைந்து அனுமனுக்குப் பின்னே
போகின்ற;காலபாசத்தை ஒத்தது - யமனுடைய பாசத்தைப் போன்றிருந்தது.
 

     அனுமன் வால்துப்பறியும் அரக்கர்களுக்கு அஞ்சி அனுமனுக்குப்
பின்னே மறைந்து போகும் காலபாசத்தை ஒத்தது. துப்பு - அறிவை உணர்த்தி
ஆராய்ச்சியை விளக்கிற்று. கள்ளுண்டு ஆராயும் இயல்பு பேசப்பெற்றது. இன்
- அல்வழிச் சாரியை. துப்புத் தொழில் என்க. ஆராயும் தொழில். அன்று, ஏ -
அசைகள்.                                                  (33)