4774. 

மேருவை முழுதும் சூழ்ந்து,
     மீதுற்றவேக நாகம்,
கார் நிறத்துஅண்ணல் ஏவ,
     கலுழன் வந்துற்ற காலை
சோர்வுறு மனத்ததுஆகி
     சுற்றியசுற்று நீங்கிப்
பேர்வுறுகின்றவாறும்
     ஒத்தது,அப் பிறங்கு பேழ்வால்.
 

     அப் பிறங்குபேழ்வால் - அந்த விளக்கமானபெரிய வால்;
கார்நிறத்து அண்ணல்ஏவ - கரிய நிறத்தையுடைய திருமால் கட்டளையிட;
கலுழன் வந்து உற்ற காலை - கருட பகவான் வந்த சமயத்தில்; மேருவை
முழுதும் சூழ்ந்து
- மேருமலையை முற்றிலும் பற்றிக்கொண்டு; மீதுஉற்ற
வேகநாகம்
- சிகரத்திலே தங்கிய விடம் பெற்ற ஆதிசேடன்; சோர்வுறு
மனத்ததாகி
- தளர்ச்சியுற்ற மனத்தை உடையதாய்; சுற்றிய சுற்று நீங்கி -
மேருமலையைச் சுற்றியிருந்த கட்டு விலகி; பேர்வுறுகின்ற ஆறும் ஒத்தது -
நீங்கிப் போகின்ற தன்மையையும் ஒத்திருந்தது.

     மேருமலையைப்பிணித்திருந்த ஆதிசேடன் கருடன் வந்ததும் பிணிப்பு
நீங்கி விலகிச் செல்வதுபோல் அனுமன் வால் இருந்தது. வேகம் - நஞ்சு -
அரவு கான்ற வேகம் ( சிந்தாமணி 1274) விரைவு என்ற கூறினும் அமையும்,
                                                     (34)