4776. | வலங்கையின் வயிர ஏதி வைத்தவன்வைகும் நாடும் கலங்கியது,'ஏகுவான்தன் கருத்துஎன்கொல் ?' என்னும் கற்பால்; 'விலங்குஅயில்எயிற்று வீரன் முடுகியவேகம் வெய்யோர் இலங்கையின்அளவுஅன்று' என்னா, இம்பர்நாடுஇரிந்தது இப் பால். |
வலங்கையின்-வலக்கரத்தில்; வயிர ஏதி வைத்தவன் - வச்சிராயுதத்தை ஏந்திய இந்திரன்; வைகும் நாடும் - தங்கிய உலகமும்; கலங்கியது - கலக்கம் அடைந்தது; ஏகுவான்தன் - செல்லும் அனுமனுடைய; கருத்து என்கொல் என்னும் கற்பால் - திருவுள்ளம் யாதோ என்னும் ஆராய்ச்சியால்; இப்பால் விலங்கு அயில் எயிற்று வீரன் - இவ்வுலகில் வளைந்த கூர்மையான பற்களை உடைய அனுமன்; முடுகிய வேகம் - கடுமையான வேகமானது; வெய்யோர் இலங்கையின் அளவு அன்று என்னா - அரக்கர்களுக்குரிய இலங்கையின் எல்லையுடன் அடங்குவது அன்று என்று கூறி; இம்பர் நாடு இரிந்தது - இந்த உலகம் கலங்கிச் சிதறியோடிற்று. அனுமன் வேகம்இலங்கையுடன் அடங்குவதன்று, நம்மீதும் பாயலாம் என்று கருதி உலக மக்கள் கலங்கி ஓடினர். 'வலக் கை' என்பது எதுகை நோக்கி'வலங்கை' எனத் திரிந்தது. கற்பு - கல்வி, ஆராய்ச்சி; உலகம் தாங்கிய மேம்படு கற்பின் (பதிற்றுப் 59-8) என்றது காண்க. வயிர ஏதி - வச்சிராயுதம். முள்ளுக்கு இட்ட நெருப்பு மூப்பனையும் அழிக்கும். அதுபோல் தீயவர்மேல் கொண்ட சீற்றம் நமக்கும் ஊறு விளைக்கும் என்று உலகத்தவர் கருதினர். (காஞ்சிப் புராணம் - நாட்டுப்படலம் 102) (36) |