மைந்நாக மலையின்தோற்றம்

கலிநிலைத் துறை

4779. 

இந் நாகம்அன்னான் எறிகால் என
     ஏகும்வேலை,
திந் நாகமாவில், செறி கீழ்த் திசை
     காவல்செய்யும்
கைந் நாகம்,அந்நாள் கடல்வந்தது ஓர்
     காட்சிதோன்ற,
மைந் நாகம்என்னும் மலை வான் உற
     வந்ததுஅன்றே.

     இ - இந்த; நாகம்அன்னான் - மலையை ஒத்த அனுமன்; எறிகால்
எனஏகும் வேலை
- பெருங்காற்றைப் போலப் போகின்ற சமயத்தில்;
மைந்நாகம்என்னும் மலை - மைந்நாகம் என்று பேசப்படும் மலையானது;
தி(க்)நாகமாவில் - எட்டுத் திசைகளிலும் உள்ள யானைகளுக்குள்; செறி
கீழ்த்திசை
- (மேகம்) செறிந்துள்ள கிழக்குத் திசையில்; காவல் செய்யும்
கைநாகம்
- பாதுகாக்கும் ஐராவதம்என்னும் மலை; அந்நாள் -
பழங்காலத்தில்; கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற - கடலில் எழுந்து வந்த
காட்சியானது புலப்பட; வானுற வந்தது - ஆகாயம் அளாவும்படி தோன்றிற்று.

     பாற்கடல்கடைந்தபோது ஐராவதம் என்னும் யானை (கடலிலிருந்து)
வெளிப்பட்டாற்போல மைநாகமலை அனுமனுக்கு எதிரே வெளிப்பட்டது. திக்
+நாகம் - திந்நாகம் மைநாகம் என்னும் சொல் எதுகை நயம் கருதி மைந்நாகம்
என அமைக்கப் பெற்றது. நாகமாவில் - யானை என்னும் விலங்குகளில்.
மாவில் செறி கீழ்த்திசை - சிறந்த ஒளி செறிந்த கிழக்குத்திசை என்று
கூறுவாரும் உளர். அன்று, ஏ - அசைகள். கம்பன் அடிப்பொடி அவர்கள்
இத்தகைய பாடல்களை அளவியற் கலிநிலைத்துறை என்பர். இத்தகைய
பாடல்கள் கம்பராமாயணத்தில் 128 பாடல்கள் உள்ளன. (மணிமலர்
1976)                                                    (39)