4780. 

மீ ஓங்குசெம்பொன் முடிஆயிரம்
     மின் இமைப்ப,
ஓயா அருவித்திரள்
     உத்தரியத்தை ஒப்ப,
தீயோர் உளர்ஆகியகால்,
     அவர் தீமைதீர்ப்பான்,
மாயோன் மகரக்கடல்நின்றுஎழும்
     மாண்பதுஆகி.

     மீஓங்குசெம்பொன்முடி ஆயிரம் - வானம் அளாவிய பொன்மயமானஆயிரம் சிகரங்கள் (கிரீடங்கள்); மின் இமைப்ப - ஒளி
விளங்கவும்; ஓயாஅருவித் திரள் - வற்றாத அருவிகளின் கூட்டம்;
உத்தரியத்தை ஒப்ப -மேலாடையை ஒத்திருக்கவும்; தீயோர்
உளர்ஆகியகால்
- கொடியவர்கள்தோன்றும் காலத்தில்; அவர் தீமை
தீர்ப்பான்
- அவர்களால் பெருகும்தீமையை அழிக்கும் பொருட்டு;
மாயோன் - (எங்கும் மறைந்துள்ள) திருமால்;மகரக் கடல் நின்று எழும்
மாண்பது ஆகி
- மீன்கள் உலாவும்கடலிலிருந்து எழுகின்ற சிறப்பை
உடையதாய்.

     ஆயிரம்சிகரங்களையும் அருவித் திரள்களையும் பெற்ற மைந்நாகமலை,
ஆயிரம் முடிகளையும் உத்தரியத்தையும் உடைய திருமாலை ஒத்தது.
தீயோர்களின் தீமையை அழிக்கத் திருமால் அரவணையிலிருந்து எழும்
காட்சியைப் பரவசப்பட்டுப் பேசுவார் கம்பர். முடி -மலைச்சிகரம்; இங்கே
கிரீடம் என்னும் பொருளைத் தரும். புருஷ சூக்தம்இறைவனின் ஆயிரம்
முடியைச் சிறப்பித்துப் பேசும். தாரார் முடியாயிரம் (சடகோபரந்தாதி) 'சஹஸ்ர
சீர்ஷ புருஷ'                                             (40)