4784. | 'இந் நீரின் என்னைத் தரும் எந்தையை எய்திஅன்றி, செந் நீர்மைசெய்யேன்' என, சிந்தனை செய்து,நொய்தின் அந் நீரில்வந்த முதல் அந்தணன் ஆதிநாள்அம் முந்நீரில்மூழ்கி, தவம்முற்றி முளைத்தவாபோல்,* |
இந்நீரில் -இந்தக்கடலிலே; என்னைத் தரும் எந்தையை எய்தி அன்றி - என்னைப் பெற்றெடுத்த என்னுடைய தந்தையை அடையாமல்; செந்நீர்மை செய்யேன் என - செம்மையான செயல்களைச் செய்ய மாட்டேன் என்று; நொய்தின் சிந்தனை செய்து - எளிதாக உள்ளத்தில் எண்ணி; அந்நீரில் வந்த முதல் அந்தணன் - அந்தக் கடலில் தோன்றிய பிரம தேவன்; ஆதிநாள் - முற்காலத்தில் ( முதல் ஊழிக்காலத்தில்); அம் முந்நீரில் மூழ்கி - அந்தக் கடலிலே முழுகி; தவம் முற்றி முளைத்த வாபோல் - தன்னுடைய தவம் நிரம்பி மறுபடி எழுந்தது போல். முதலில்தோன்றிய பிரமதேவன் தன்னைப் படைத்தவனைத் தேடிக் கடலடியில் தவஞ்செய்து வெளிப்பட்டான். அதைப்போல மைந்நாகம் வெளிப்பட்டது. செந்நீர்மை - செம்மையான பண்பு. அது செயலைக் குறிக்கிறது. அருஞ்செயலை எளிதாக எண்ணினான் பிரமன். ஆதலின் நொய்தின் என்றான். முந்நீர் - மூன்று தன்மையைப் பெற்றது என்பது பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்வது கடல். ஆற்றுநீர், ஊற்றுநீர், மேல்நீர் என்னும் மூன்று நீர்களை உடையது என்பதும் ஒன்று, முன்னீர் என்று பாடம் ஓதி நிலத்திற்கு முன்னாகிய நீர் என்றும் உரைப்ப. 'பார் முதிர் பனிக்கடல்' (முருகு) (44) |