4789. 

மனையில்பொலி மாக நெடுங்கொடி
     மாலை ஏய்ப்ப
வினையின் திரள்வெள் அருவித் திரள்
     தூங்கி வீழ
நினைவின் கடலூடுஎழலோடும்,
     உணர்ந்துநீங்காச்
சுனையில், பனைமீன் திமிலோடு
     தொடர்ந்துதுள்ள*

     மனையில்பொலிமாக நெடுங்கொடி -தேற்றாமரத்தின் மேலே
விளங்கும், ஆகாயம் அளாவும் நீண்ட கொடி; மாலை ஏய்ப்ப - மாலையை
ஒத்திருக்கவும்; வினையின் திரள் - விதியைப் போல மறைந்துள்ள; வெள்
அருவித்திரள் -
வெண்மையான அருவிக்கூட்டம்; தூங்கி வீழ -  தாழ்ந்து
விழவும்; நினைவின் கடலூடு எழலோடும் - மனிதர்களின் எண்ணத்தைப்
போலக் கடலின் நடுவே உதித்தவுடனே; உணர்ந்து நீங்கா -
உறக்கத்திலிருந்து விழித்து இருப்பிடத்தை விட்டு நீங்காமல்; சுனையில் -
மலைக்குளத்தில்; பனைமீன் திமிலொடு தொடர்ந்து துள்ள - பனை மீனும்
திமிங்கிலமும் இடையறாது துள்ளவும்.

     கடலிலிருந்துமேலே எழுந்த மைந்நாக மலையில் உள்ள
தேற்றாமரத்தைச் சார்ந்த நீள்கொடி, மாலையைப் போல இருந்தது, அம்மலைச்
சுனைகளில் பனை மீனும் திமிங்கலமும் துள்ளுகின்றன.

மனை என்பதற்குவீடு என்றே பொருள் கூறப் பெற்றது. கொடி மாலை
ஏய்ப்ப என்னும் தொடர் பலவிதமாகப் பொருள் கூறப்பெற்றுப் பொலிவிழந்தது.
மாலை ஏய்ப்ப - வரிசைகளைப் போலவும் என்று பொருள் கூறினர். மாலை
ஏய்ப்ப - மாலையை ஒத்திருக்க என்று இங்கு கூறப் பெற்றது. கொடியானது
மாலையை ஒத்திருந்தது என்பதே இயல்பான பொருள். மனை - தேற்றாமரம்.
தேற்றாமரத்தைப் பரிபாடல் மனைமரம் என்றே கூறும். 'மனைமரம் வான் வீரம்
(11-19) என்னும் தொடரைக் காண்க. கவிச்சக்கரவர்த்தி 'மனை' என்றான்.
அவனுக்கு வழிகாட்டியவர் கொங்குவேளிர். 'காரிருள் வீடு' என்று பேசுவார்
(பெருங்கதை 41-33). இல்லம் எங்கணும் வான்தொட இழைத்திடும் குன்றம்
(காஞ்சி - நாட்டு - 48)                                      (49)