அனுமன் மைந்நாகத்தின் மேல் உயர்தல் 4792. | நீர்மேல்படரா, நெடுங்குன்று நிமிர்ந்துநிற்றல் சீர்மேல் படராதுஎனச் சிந்தை உணர்ந்துசெல்வான் வேர்மேல் பட வன்தலை கீழ்ப்பட நூக்கி,விண்ணோர் ஊர்மேல் படரக்கடிது உம்பரின் மீது உயர்ந்தான். |
நெடுங்குன்று -பெரியமைந்நாக மலையானது; நீர்மேல் படரா நிமிர்ந்து நிற்றல் - கடலின் மேலே விரிந்து உயர்ந்திருத்தல்; மேல்சீர் படராது எனச் சிந்தை உணர்ந்து - மேலான சிறப்பைப் பெருக்காது என்று மனத்தே கருதி; செல்வான் - செல்பவனாகிய அனுமன்; வேர்மேல்பட - மலையின் வேரானது மேலே தெரியவும்; வன்தலை கீழ்ப்பட - வலிமையான சிகரம் கீழே விழவும்; நூக்கி - (அந்த மலையை) உந்தித் தள்ள; விண்ணோர் ஊர்மேல் படர - தேவர்களின் ஊர் தன் மேல் பரவும்படி; கடிது - வேகமாக; உம்பரின் மீது உயர்ந்தான் - வானின்கண் பாய்ந்தான்; மைந்நாகமலையைக்கண்ட அனுமன் இத் தடையால் சிறப்பு உண்டாகாது என்று கருதி மேல் நோக்கிப் பாய்ந்தான். வெள்ளம் தடையைக் கண்டபோது அதைக் கடக்க மேலே போவது போன்றது அனுமன் செயல். ஆதலின் உம்பரின் ஊடு பாய்ந்தான் என்றான். (52) |