மைந்நாகம் அனுமனொடு உரையாடல் 4793. | உந்தாமுன் உலைந்து உயர்வேலை ஒளித்தகுன்றம் சிந்தாகுலம் உற்றது; பின்னரும் தீர்வில்அன்பால் வந்துஓங்கி ஆண்டு ஓர்சிறு மானிடவேடம்ஆகி எந்தாய்இதுகேள்என இன்ன இசைத்ததுஅன்றே. |
வேலை ஒளித்தஉயர்குன்றம் - கடலில்இந்திரனுக்குப் பயப்பட்டு மறைந்திருந்த பெரியமலை; உந்தாமுன் - உந்திக் கொண்டு வருவதற்குள்; உலைந்து சிந்தா குலம் உற்றது - அச்சமடைந்து மனத்தில் மயக்கம் அடைந்தது; பின்னரும் - மறுபடியும்; தீர்வு இல்அன்பால்- ஒதுக்க முடியாத அன்புடன்; ஆண்டு -அவ்விடத்தில்; ஓர்சிறு மானிடவேடம் ஆகி - ஒப்பற்ற மனித வேடத்தைமேற்கொண்டு; வந்து ஓங்கி - அனுமனுக்கு எதிரே வந்து நிமிர்ந்து; எந்தாய் - என்னுடைய தந்தையே; இது கேள் என இன்ன இசைத்தது - இந்த மொழியைக் கேட்பாயாக என்று பின்வரும் சொற்களைக் கூறிற்று. மைந்நாகமலை,அனுமன் உந்தித்தள்ள அதனால் மனமயக்கம் உற்று, மனித வடிவத்துடன் வந்து, இதைக்கேள் என்று இம் மொழியைக் கூறிற்று. உலைதல் - அச்சம் அடைந்து, சிந்தாகுலம் - மனமயக்கம். இன்ன - இந்த, அன்னோ - அசை, சிந்தாகுலம் உற்று என்னைகொல் வாட்டத் திருத்தியதே (திருக்கோவையார்) (53) |