4794. | வேற்றுப்புலத்தோன் அலென் ஐய, விலங்கல்எல்லாம் மாற்றுச்சிறைஎன்று அரி வச்சிரம் மாண ஒச்ச வீற்றுப்பட நூறியவேலையின் வேலையுய்த்து காற்றுக்கிறைவன் எனைக் காத்தனன் அன்புகாந்த. |
ஐய - தலைவனே !;வேற்றுப் புலத்தோன் அலென் - யான் வேறுபட்ட நாட்டைச் சார்ந்தவன் அன்று; அரி -பகைவர்களை அழிக்கும் இந்திரன்; விலங்கல் எல்லாம் சிறை - எல்லா மலைகளின் சிறகுகளை; மாற்றுஎன்று - அழிப்பாயாக என்று கூறி; வச்சிரம் மாண ஓச்ச - வச்சிராயுதத்தைச்சிறப்பு உண்டாக வீசி; வீற்றுப்பட நூறிய வேலையின் - தனித் தனியாகச்சிதைத்த காலத்தில்; அன்பு காந்த - அன்பு விளங்கும்படியாக; எனைக்காற்றுக்கிறைவன் - என்னை வாயு பகவான்; வேலை உய்த்துக் காத்தனன்- கடலிலே தள்ளிக் காப்பாற்றினான். என்னைப் பகைவன்என்று கடியற்க; இந்திரன் மலைகளின் சிறகுகளை அரிந்த காலத்து உன் தந்தையால் பாதுகாக்கப் பெற்றவன் என்று மைந்நாகமலை கூறியது. வேற்றுப் புலத்தோன் - பகைவர் நாட்டவன். வேற்றுப் புலத்திறுத்து (புறம் - 31) (54) |