4795. | அன்னான்அருங்காதலன் ஆதலின் அன்பு தூண்ட என்னால் உனக்குஈண்டு செயற்கு உரித்தாயதுஇன்மை பொன்னார் சிகரத்து இறை ஆறினை போதி என்னா, உன்னாஉயர்ந்தேன் - உயர்விற்கும் உயர்ந்ததோளாய் ! |
உயர்விற்கும்உயர்ந்த தோளாய் - உயர்ந்துள்ளபொருள்கள் அனைத்திலும் உயர்ந்த தோள்களையுடையவனே; அன்னான் - அந்த வாயு தேவனுடைய; அருங்காதலன் ஆதலின் - அருமை மைந்தன் நீ ஆகையால்; அன்பு தூண்ட - அவன்பால் யான் கொண்ட அன்பானது உந்தித்தள்ள; ஈண்டு என்னால் உனக்கு - இங்கே என்னால் உனக்கு; செயற்கு உரித்து ஆயது இன்மை - செய்வதற்கு உரிய உபகாரம் வேறு இல்லாததால்; பொன்னார் சிகரத்து - பொன் நிரம்பிய சிகரத்தில்; இறை ஆறினை போதி என்னா - சிறிது இளைப்பாறிப் போவாய் என்று; உன்னா - நினைந்து; உயர்ந்தேன் - மேலே கிளர்ந்து வந்தேன். அனுமனே ! எனக்குஉதவி செய்த வாயுதேவன் புதல்வன் நீ ஆகையினாலே உனக்கு உதவி செய்வதற்கு மேலே கிளர்ந்து வந்தேன் என்று மைந்நாகமலை கூறிற்று. ஆறினை - இளைப்பாறியவனாய். (55) |