4799. | வருந்தேன்;அது என்துணை வானவன் வைத்தகாதல் அருந்தேன் இனியாதும், என் ஆசை நிரப்பிஅல்லால் பெருந்தேன்பிழிசாலும்நின் அன்பு பிணித்தபோதே இருந்தேன்நுகர்ந்தேன்; இதன்மேல் இனி ஈவதென்னோ ? |
மைநாகமலையைப்பார்த்து அனுமான், வருந்தேன் - நான் பறந்து வந்ததால் சோர்வு அடையேன்; அது - அதற்குக் காரணம்; என்துணை வானவன் வைத்த காதல் - எனக்கு ஆதரவாக இருக்கும் இராமபிரான் என்பால்கொண்ட அன்பாகும்; இனி - இப்போது; என் ஆசை நிரப்பி அல்லால் - என் விருப்பம் நிறைவேறினால் அல்லாமல்; யாதும் அருந்தேன் - எதையும் உண்ணமாட்டேன்; பெருந்தேன் பிழி சாலும் நின் அன்பு - பெரியதேனின் பிழிவினை ஒத்த உன்னுடைய அன்பானது; பிணித்த போதே - கட்டிப் பிடித்த அப்பொழுதே; இருந்தேன் - உன் வீட்டில் தங்கி; நுகர்ந்தேன் - உண்டவன் ஆனேன்; இனி இதன்மேல் ஈவது என்னோ - இப்போது இதற்குமேல் கொடுக்கக்கூடிய பொருள் யாது ? இராமபிரான்என்பால் வைத்த கருணையால் யான் சோர்வு அடையமாட்டேன். என்னுடைய விருப்பம் நிறைவேறினால் அல்லாமல் எதையும் உண்ணேன். உன் அன்பு என்னைப் பிணித்து விட்டது. அதனாலேயே உண்டவன் ஆனேன். இனிமேல் தருவதற்கு யாதுளது என்று அனுமன் கூறினான். நிரப்புதல் - நிறைவேறுதல். நிற்றேடி வருந்த நிரப்பினையோ (கம்ப. 3611) பெருந்தேன் - மலைத்தேன் (குறுந்தொகை 3) (59) |