4800. | முன்பிற் சிறந்தார் இடையுள்ளவர் காதல்முற்றப் பின்பிற்சிறந்தார் குணம் நன்று; இது பெற்றயாக்கைக்கு என்பிற்சிறந்தாய தோர் ஊற்றம் உண்டு என்னல்ஆமே ? அன்பிற்சிறந்தாயதோர் பூசனை யார்கண்உண்டே ? |
காதல் முற்ற-அன்பானது நிறைவு பெறுவதாலே; முன்பிற் சிறந்தார் -முற்காலத்தே சிறந்திருந்த தலையேழு வள்ளல்களும்; இடையுள்ளவர் - இடையேழு வள்ளல்களும்; பின்பிற் சிறந்தார் - பிற்காலத்தே சிறந்திருந்த கடையெழு வள்ளல்களும் (மேற்கொண்ட); குணம் நன்று - பண்பாகிய அன்பு பெரியது; இது பெற்ற யாக்கைக்கு - இந்த அன்பைப் பெற்றிருக்கும் உடம்புக்கு; என்பிற் சிறந்து ஆயதோர் - எலும்பைவிடச் சிறப்புற்ற; ஊற்றம் உண்டு - வலிமையுள்ளது; என்னல் ஆம் - என்று கூறுவது தகுதியுடையது தான்; அன்பின் சிறந்தாய தோர் - அன்பைவிடச் சிறப்புற்ற; பூசனை - வழிபாடு; யார்கண் உண்டு - எவர்பால் உள்ளது? மூவகை வள்ளல்கள்பெற்றிருந்த அன்பு மிகப் பெரியது. இந்த அன்பைப் பெற்றுள்ள உடம்புக்கு எலும்பைவிடச் சிறந்த வலிமை உள்ளது. அன்பைவிடச் சிறந்த வழிபாடு கிடையாது. என்பினும் சிறந்தது அன்பு என்க. ஆதலின் ததீசி அன்புக்காக என்பை வழங்கினான். வலிமையுள்ளவர்பால் அன்பு கொள்வது சிறந்ததே என்பது கருத்து. அன்பிற் சிறந்த பூசனையில்லை என்ற உயர்ந்த கருத்து இங்கே உரைக்கப்படுகிறது. (60) |