4805. | மூன்றுற்றதலத்திடை முற்றிய துன்பம்வீப்பான் ஏன்றுற்றுவந்தான் வலி மெய்ம்மை உணர்த்துநீ என்று ஆன்றுற்றவானோர் குறை நேர அரக்கிஆகித் தோன்றுற்றுநின்றாள் சுரசைப் பெயர்ச் சிந்தைதூயாள். |
ஆன்று உற்றவானோர் - அறிவு நிரம்பி அங்கு வந்த தேவர்கள்; உற்ற மூன்று தலத்திடை - பொருந்திய மூன்று உலகத்தில்; முற்றிய துன்பம் வீப்பான் - முதிர்ந்த துன்பத்தை ஒழிக்கும்படி; ஏன்றுற்று வந்தான் - ஏற்றுக்கொண்டு வந்துள்ள அனுமானின்; மெய்ம்மை வலிநீ உணர்த்து - வலியின் உண்மையை எங்கட்கு நீ அறிவிப்பாயாக; என்று குறை நேர - என்று வேண்டிக் கொள்ள; சுரசைப்பெயர் சிந்தை தூயாள் - சுரசை என்ற பெயரை உடைய தூய மனத்தைஉடையவள்; அரக்கி ஆகி தோன்றுற்றுநின்றாள்-(அனுமனுக்கு எதிரில்)அரக்கி வடிவத்துடன் தோன்றி நின்றாள். அனுமன் வலிமையைஎங்கட்கு அறிவிக்க என்று தேவர் வேண்டிக் கொள்ள சுரசை அரக்கியாகி அனுமனுக்கு எதிரே தோன்றினாள். சுரசையை, தாட்சாயணி என்றும், நாகமாதா என்றும் கூறுவர். வால்மீகம், நாகமாதா (சுந்தர 1-162) என்றும், தாட்சாயணி (சுந்தர 187) என்றும் கூறும். (65) |