அனுமன் செயலைநோக்கிய தேவர்கள் வாழ்த்துக் கூறல்

 4812.

மின்மேற்படர் நோன்மையனாய் உடல்
     வீக்கம்நீங்கி
தன்மேனியளாய் அவள், தாயினும்
     அன்பு தாழ
'என்மேல்முடியாதன' என்று இனிது
     ஏத்திநின்றாள்
பொன்மேனி யனும்நெடிது ஆசி
     புனைந்துபோனான்--

     அவள் - அந்தச் சுரசை; தன் மேனியளாய் - தனக்குரிய இயல்பான
உடம்பைப் பெற்றவளாய்; உடல் வீக்கம் நீங்கி - உடலின் பருமன் நீங்கி;
தாயினும் அன்பு தாழ - தாயைவிட அன்பு அதிகரிக்க; மேல் - இனிமேல்;
முடியாதன என் என்று - உன்னால் செய்ய முடியாதவை யாவை? என்று
கூறி; இனிது ஏத்தி நின்றாள் - வாழ்த்தி நின்றாள்; பொன் மேனியனும் -
பொன் போன்ற திருமேனி பெற்ற அனுமன்; மின்மேல் படர்
நோன்மையனாய் -
மின்னலின் மேல் படர்ந்து செல்லும்
வலிமையுடையவனாய்; நெடிது ஆசி புனைந்து போனான் - பெரிய
வாழ்த்துக்களை அணிந்து சென்றான்.

     சுரசை இயல்பானமேனி பெற்று உன்னால் செய்ய முடியாத செயல்கள்
இல்லை என்றாள். அனுமன் சுரசையின் ஆசி பெற்றுச் சென்றான். 'முடியாதது
என் எனக்கேல் இனி' என்று நம்மாழ்வார் பேசினார் (2-6,7) சுரசை என்மேல்
முடியாதன என்று கூறினாள்.                                  (72)