4816. | காதக்கடுங்குறி கணத்து இறுதி கண்ணாள் பாதச்சிலம்பின்ஒலி வேலைஒலி பம்ப, வேதக்கொழுஞ்சுடரை நாடிநெடு மேல்நாள் ஓதத்தின்ஓடும்மது கைடவரை ஒத்தாள். |
கணத்து இறுதி -ஒருகணத்தின் முடிவுக்குள்; காதம் - காத தூரத்திலுள்ள பொருளை; கடுங்குறி கண்ணாள் - வேகமாக அறியும் கண்களையுடைய அங்கார தாரை; பாதச் சிலம்பின் ஒலி - பாதத்தின் சிலம்பின் ஒலியாலே; வேலையொலி பம்ப - கடல் அலையின் ஒலி அடங்க; நெடுமேல் நாள் - நீண்ட காலத்துக்கு முன்; வேதக் கொழுஞ்சுடரை - வேதங்கள் உணர்த்தும் ஒளிமயமான திருமாலை; நாடி - போர்செய்ய விரும்பி; ஓதத்தின் ஓடும் - கடலிலே ஓடி வருகின்ற; மது கைடவரை - மதுவையும் கைடவனையும்; ஒத்தாள் - ஒத்திருந்தாள். அங்காரதாரை -நீண்ட தூரத்தில் உள்ள பொருள்களைக் காணும் கண்களைப் பெற்றவள். அவள் திருமாலுடன் போர் செய்ய வந்த மது கைடவர்களைப் போன்றிருந்தாள். கடும்குறி - வேகமாக அறியும். கலுழன்தன் கடுமையிற் கரந்தான் (6237) (வேலை - அலை பம்பு - அடங்கி) (76) |