4819.

பேழ்வாய்அகத்துஅலது பேர்உலகம் மூடும்
நீள்வான்அகத்தினிடை ஏகும்நெறி நேரா
ஆழ்வான்அணுக்கன் அவள்ஆழ்பில வயிற்றைப்
போழ்வான் நினைத்தினைய வாய்மொழி புகன்றான்:

     பேர்உலகம் மூடும்நீள்வான் அகத்தின் இடை - பெரிய உலகை
மூடுகின்ற நீண்ட ஆகாயத்தில்; பேழ்வாய் அகத்து அலது - (அரக்கியின்)
பிளந்த வாயே அல்லாமல்; ஏகும் நெறி நேரா ஆழ்வான் - செல்லும் வழி
கிடையாமல் துன்புற்ற ;அணுக்கன்- (இராமபிரானின்) அணுக்கத்
தொண்டனாகிய அனுமன்; அவள் ஆழ்பில வயிற்றைப் - அவள்
ஆழமானகுகைபோன்ற வயிற்றைப்; போழ்வான் - பிளப்பதற்கு;  
நினைத்து -
எண்ணி;இனைய வாய்மொழி - இப்படிப்பட்ட வார்த்தையை;
புகன்றான் -
கூறினான்.

     வானில் கடந்துசெல்வதற்கு அரக்கியின் வாயைத் தவிர வேறு இடம்
இன்மையால் துன்புற்ற அனுமன் அரக்கியின் வாயைப் பிளக்க எண்ணி இந்த
வார்த்தையைக் கூறினான்.                                      (79)