4825.
 

ஆர்த்தனர்கள் வானவர்கள்; தானவர் அழுங்கா
வேர்த்தனர்;விரிஞ்சனும் வியந்து, மலர்வெள்ளம்
தூர்த்தனன்;அகன்கயிலையில் தொலைவு இலோனும்
பார்த்தனன்;முனித்தலைவர் ஆசிகள் பகர்ந்தார்.

(அனுமன் செயலைக்கண்டு)

     வானவர்கள்ஆர்த்தனர் - தேவர்கள் ஆரவாரம்செய்தனர்; தானவர்அழுங்கா வேர்த்தனர் - அசுரர்கள் மனம் வருந்தி (அச்சத்தால்)
உடல்வெயர்த்தனர்; விரிஞ்சனும் - பிரம்மதேவனும்; வியந்து -
ஆச்சரியப்பட்டு;மலர் வெள்ளம் தூர்த்தனன் - மலரை வெள்ளம் போல்
தூர்த்தான்; அகன்கயிலையில் தொலைவிலோனும் - அகன்ற கயிலை
மலையில் உள்ளஇறுதியில்லாத சிவபெருமானும்; பார்த்தனன் -
கடைக்கணித்தான்;முனித்தலைவர் - தலைமை சான்ற முனிவர்கள்; ஆசிகள்
பகர்ந்தனர் -
வாழ்த்துக்களை கூறினார்.

     அனுமனின்செயலைக் கண்டு தேவர்களும் தெய்வங்களும் அடைந்த
மகிழ்ச்சி பேசப்படுகிறது. ஆர்த்தனர்கள் - கள், அசை - விகுதிமேல் விகுதி
என்பர். திருமால் இராமனாக அவதரித்தமையின் மும்மூர்த்திகளில் இருமூர்த்தி
களே பேசப்படுகின்றனர். தனுவின் புதல்வர்கள் ஆகையினால் அசுரர்கள்
தானவர் என்று கூறப்பெற்றனர். பார்த்தனன் - அருளொடு நோக்கினான்.
பாராயோ என்னை முகம் - பார்த்து ஒருகால் என் கவலை தீராயோ என்பர்
தாயுமானவர். தொலைவிலோன் - சிவபெருமான்.                  (85)