4826. | மாண்டாள்அரக்கி; அவள்வாய் வயிறுகாறும் கீண்டான்இமைப்பினிடை மேருகிரி கீழா நீண்டான்;வயக்கதி நினைப்பின் நெடி தென்னப் பூண்டான்;அருக்கன் உயர் வானின்வழி போனான். |
அரக்கிமாண்டாள் - அங்கார தாரைஇறந்தாள்; (அனுமன்) அவள்வாய் - அவளுடைய வாயை; வயிறு காறும் கீண்டான் - வயிறுவரை இரண்டாகப் பிளந்தான்; இமைப்பினிடை - கண் இமைப்பதற்கு முன்பு; மேருகிரி கீழா நீண்டான் - மகா மேருமலை தன்கீழே இருக்கும்படி பேருருக்கொண்டான்; நினைப்பின் நெடிது என்ன- எண்ணத்தை விட வேகம் என்றுகூறும்படி; வயக்கதி பூண்டான் - வேகமாகப் பறத்தலை மேற்கொண்டான்;அருக்கன் உயர்வானின் வழி போனான் - சூரியன் இயங்கும் உயர்ந்தவான வழியே சென்றான். (86) |