அறுசீர் விருத்தம் 4829. | தசும்புடைக் கனக நாஞ்சில் கடிமதில்தணித்து நோக்கா அசும்புடைப்பிரசத் தெய்வக் கற்பகநாட்டை அண்மி விசும்பிடைச்செல்லும் வீரன் விலங்கிவேறு இலங்கை மூதூர்ப் பசும்சுடர்ச்சோலைத்து ஆங்கோர் பவளமால்வரையில் பாய்ந்தான். |
பிரசம் அசும்புடை- தேன்கசிதலைப் பெற்ற; தெய்வக் கற்பக நாட்டை அண்மி - கற்பக மரங்கள் செழித்த தேவலோகத்தை எட்டி; விசும்பு இடைச் செல்லும் வீரன் - ஆகாயத்தே செல்லும் அனுமன்; தணித்து - வேகத்தைக் குறைத்து; தசும்புடை - குடங்களைப் பெற்றுள்ள; கனக நாஞ்சில்- பொன்மயமான ஏப்புழை அமைந்த; கடிமதில் - காவலுடன்கூடியமதிலை;நோக்கா - பார்த்து; வேறு விலங்கி - செல்லும் வழியை மாற்றிக் கொண்டு;மூதூர் இலங்கை - பழைய ஊராகிய இலங்கையிலுள்ள; பசும்சுடர்சோலைத்து - பசுமையான ஒளியை உடைய; ஆங்கு ஓர் - சோலையின் ஒருபக்கத்தில் உள்ள; பவளமால் வரையில் - பவளமலையில்; பாய்ந்தான் -குதித்தான். அனுமன்இலங்கையின் மதிலைப் பார்த்து, வேகத்தைக் குறைத்துக்கொண்டு செல்லும் வழியை மாற்றிக்கொண்டு பவள மலையில் குதித்தான். விசும்பிடைச் செல்லும் வீரனின் காட்சியும் சிந்தனையும் (89-195 பாடல்வரை). தசும்பு - கோபுரங்களில் உள்ள கலசம். நாஞ்சில் பொன் மயமாய் இருக்கும் போலும். இலங்கை முதல் ...... கனக நாஞ்சில் என்று முன்பு கூறப் பெற்றது. (கம்ப. 4742). (89) |