4831. | மண்அடிஉற்று, மீது வான்உறுவரம்பின் தன்மை எண்அடி யற்றகுன்றில் நிலைத்துநின்று எய்த நோக்கி, விண்இடை உலகம்என்னும் மெல்லியல்மேனி நோக்கக் கண்ணடி வைத்ததுஅன்ன இலங்கையைத் தெரியக் கண்டான். |
(அனுமன்) அடிமண் உற்று- கீழ்ப்பாகம் பூமியில் பொருந்தி; மீதுவான் உறும் - மேலே உள்ள ஆகாயத்தைப் பொருந்தியிருக்கும்; வரம்பின் தன்மை - எல்லையின் தன்மை; எண்அடி அற்ற - நினைக்க வியலாத; குன்றில் - பவளமலையில்; நிலைத்து நின்று - ஊன்றி நின்றுகொண்டு; விண்ணிடை உலகம் - வானத்தில் உள்ள தேவலோகம்; என்னும் மெல்லியல் - என்னும் பெண்ணானவள்; மேனி நோக்க - தன்னுடைய உடம்பைப் பார்ப்பதற்கு; கண்ணடி வைத்தது அன்ன - கண்ணாடி வைத்தாற்போன்று; இலங்கையை - இலங்கை மாநகரை; எய்த நோக்கி - நன்றாக ஆராய்ந்து; தெரியக் கண்டான் - கண்களாற் பார்த்தான். வரம்பு - எல்லை(சிகரம்) எய்த நோக்கி - நன்றாக ஆராய்ந்து இருவரை எய்த நோக்கி கம்ப. 375) (91) |