4833. | 'மாண்டதோர் நலத்திற்று ஆம்'என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்; வேண்டிய வேண்டின்எய்தி, வெறுப்புஇன்றி விழைந்து துய்க்கும் ஈண்ட அரும் போகஇன்பம் ஈறுஇலது;யாண்டுக் கண்டாம் ? ஆண்டது துறக்கம்;அஃதே அருமறைத்துணிவும் அம்மா.+ |
வேண்டிய வேண்டின்எய்தி - விரும்பிய பொருள்களை விரும்பியபடி பெற்று; வெறுப்பு இன்றி - வெறுப்பு இல்லாமல்; விழைந்து துய்க்கும் - விரும்பி அனுபவி்க்கும்; ஈண்டு அரும் போக இன்பம் - இங்கே கிடைக்காத போகத்தின் இன்பமானது; ஈறுஇலது யாண்டுக் கண்டாம் - முடிவின்மையை எங்கு பார்க்கின்றோமே; ஆண்டு அது துறக்கம் - அவ்விடத் திருப்பதே சுவர்க்க நகர்; அஃது - அந்தக் கருத்து; அருமறைத் துணிவும் - அருமையான வேதங்களின் கருத்தாகும்; (ஆதலால்) மாண்டது ஓர் நலத்திற்றாம் என்று - மாண்புமிக்க நன்மையை உடையதாம் என்று (சுவர்க்கத்தை); உணர்த்துதல் வாய்மைத்து அன்று - அறிவித்தல் உண்மையொடு கூடியதன்று. வேண்டியதை அடைந்துவாழும் இடம் சுவர்க்கம் என்பது வேதம் உடன்பட்ட உண்மை. (அவ்வின்பம்) இலங்கையில் உள்ளது. தேவலோகத்தில் இல்லை. ஆதலின் இலங்கையினும் அமராவதி உயர்ந்தது என்று கூறுதல் உண்மையாகாது. அமராவதியில் உள்ளவர்கள் இராவணனுக்கு அடிமைப்பணி செய்கின்றனர். அவர்கள் வேண்டியவை எட்டாப்பொருள் ஆதலின் அது துறக்கம் அன்று. (93) |