கலிநிலைத்துறை

4838. 

பஞ்சிஊட்டிய, பரட்டுஇசைக் கிண்கிணிப் பதுமச்
செஞ்செவிச்செழும் பவளத்தின் கொழுஞ்சுடர் சிதறி
மஞ்சின் அஞ்சனநிறம் மறைத்து, அரக்கியர் வடித்த
அம்சில்ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ.

     பஞ்சி ஊட்டிய -செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்றதும்; பரட்டு இசை
கிண்கிணி -
கெண்டைக்காலில் அமைந்த கிண்கிணியோடு கூடியதும் (ஆகிய);
பதுமம் - தாமரை போன்ற பாதங்களின்;
 செஞ்செவி - செம்மையானஅழகிய;
செழும் பவளத்தின் - செழிப்பான பவளம் போன்ற விரல்களின்;
கொழும்சுடர் சிதறி - ஒளியானது பரவி; மஞ்சின் - மேகத்தின்; அஞ்சனஷ
நிறம் மறைத்து -
மையை ஒத்த கரிய நிறம்மறையச் செய்து; அரக்கியர் வடித்த - அரக்கியர்கள் ஒழுங்கு செய்த; அம்சில் ஓதியோடு - அழகிய
மென்மையான (சிவந்த) கூந்தலுடன்; உவமைய ஆக்குற - ஒப்புமையாகச்
செய்ய; அமைவ - பொருந்தியிருப்பன.

     மகளிரின் கால்விரலின் ஒளிபட்டு கரிய மேகம் அரக்கியரின் சிவந்த
கூந்தலின் நிறத்தைப் பெற்றது. பரடு அமை கிண்கிணி - கெண்டைக் காலில்
அமைந்த கிண்கிணி; பரடுபுல்லிக் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப (சிந்தாமணி -
இலக்கணை 98) சுடர் - எழுவாய். சில் ஓதி - மென்மையான கூந்தல். மா -
விளம் - விளம் - மா எனும் சீர்களை முறையே பெற்றுவரும் இக் கலித்துறை.
இத்தகைய பாடல்கள் 1223 இந்நூலில் உள்ளன.                     (4)