4853.

வானும் நிலனும் பெறுமாறு, இனி மற்றும் உண்டோ---
கானும்பொழிலும், இவைசெங் கனகத்தினாலும்
ஏனைம் மணியாலும்இயற்றிய வேனும், யாவும்
தேனும் மலரும்கனியும் தரச்செய்த செய்கை ? *

     கானும் பொழிலும்இவை - காடுகளும் சோலைகளும் ஆகிய
இப்பொருள்கள்; செம் கனகத்தினாலும் - செந்நிறமுடைய பொன்னாலும்;
ஏனைய மணியாலும் - மற்றமணியாலும்; இயற்றியவேனும் -
செய்யப்பெற்றிருந்தாலும்; யாவும் - (செயற்கையாக அங்கே உள்ள)
எல்லாமரங்களும்; தேனும் - தேனையும்; மலரும் - மலரையும்; கனியும் -
பழங்களையும்; தர - வழங்கும்படி; செய்த செய்கை - அமைத்த
வினைத்திட்பத்தை; வானும் - விண்ணுலகமும்; நிலமும் - மண்ணுலகமும்;
பெறும் ஆறு -
அடையும் வழிகள் (தவத்தைத்தவிர);  இனிமற்றும்
உண்டோ -
இனி வேறும் உள்ளதா.

     மற்றும் உண்டோஎன்பதில் உள்ள உம்மை, அசை. காமக்கடல் மற்றும்
உண்டோ - என்னும் குறளில் பரிமேல் அழகர் 'உம்' அசை என்பார். பெறும்
ஆறு மற்றுண்டோ எனச் சேர்க்க. பெறும் வகை உண்டோ என்றும்
(வை.மு.கோ). பெறும் வழி வேறு எங்கேனும் உண்டோ (அடை - பதி)
என்றும் கூறப்பெறும்.                                     (19)