4855. | முன்னம்யாவரும் 'இராவணன் முனியும் என்று எண்ணி பொன்னின்மாநகர் மீச்செலான்கதிர்' எனப் புகல்வார்- கன்னி ஆரையின்ஒளியினில் கண்வழுக்குறுதல் உன்னிநாள்தொறும் விலங்கினன் போதலை உணரார். |
முன்னம் -முன்பு; யாவரும் - எல்லாப் புலவர்களும்; கதிர் - (ஆயிரம்) கதிர்களையுடைய சூரியன்; இராவணன் - (அழப்பண்ணும்) இராவணன்; முனியும் என்று எண்ணி - கோபிப்பான் என்று பயந்து கொண்டு; பொன்னின் மாநகர் மீ - பொன்மயமான இலங்கைக்கு மேலே; செலான் - போக மாட்டான்; எனப்புகல்வர் - என்று கூறுவார்கள்; (அவர்கள்) கன்னி ஆரையின் - பிறரால் பற்றப்படாத மதில்களின்; ஒளியினில் - பிரகாசத்தாலே; கண் வழுக்குறுதல் உன்னி - கண் கூசுதலை நினைந்து (சூரியன்); நாள்தொறும் - தினந்தோறும்; விலங்கினன் போதலை - விலகிச் செல்வதை; உணரார் - அறியார். கதிர் -சூரியன். உணரார், புகல்வார் என்க. பிறரால் பற்றப்படாதவள் கன்னி. அதுபோன்ற மதில். காவலில் கலையூர் கன்னியை ஒக்கும் (பால- அயோ - 9) இருசுடர் வழங்காப்பெருமூதிலங்கை (ஆசிரிய மாலை) (21) |