4858.

கொண்டவான்திரைக் குரைகடல் இடைதாய்,
                                  குடுமி
எண்தவா விசும்புஎட்டநின்று இமைக்கின்ற எழிலால்
பண்டு அராஅணைப்பள்ளியான் உந்தியில் பயந்த
அண்டமேயும் ஒத்துஇருந்தது, இவ் அணிநகர்
                                  அமைதி.

     வான் திரை கொண்ட - பேரலைகளைத் தன்பால்கொண்டுள்ள;
குரை கடல் இடையதாய் - ஒலிக்கின்ற கடலைச் சார்ந்ததாய்; எண்தவா -
நினைவின் அளவுக்கு உட்படாத; விசும்பு - ஆகாயத்தை; எட்டநின்று -
தொடும்படி நின்று; இமைக்கின்ற - ஒளி வீசுகின்ற; குடுமி எழிலால் -
(நகரத்தின்) மாட விமானங்களின் அழகால்; இ - இந்த; அணிநகர்  அமைதி
-
 அழகிய இலங்கையின் அமைப்பு; அராஅணைப் பள்ளியான் - பாம்புப்
படுக்கையில் படுத்துக் கொண்டுள்ள திருமால்; பண்டு - முற்காலத்தில்;
உந்தியில் பயந்த - தன்னுடைய உந்தியிலிந்து வெளிப்படுத்திய; அண்ட
மேயும் ஒத்து இருந்தது -
(பொன்மயமான) முட்டையை ஒத்திருந்தது.

     நீலக்கடலின்நடுவில் வானளாவி நிற்கும் பொன்மயமான இலங்கை
நீலநிறமுடைய திருமாலின் உந்தியில் தோன்றிய பொன் முட்டையை
ஒத்திருந்தது.

     அண்டம் -பொன்முட்டை. திருமாலின் உந்தியின்கண் முதலில்
பொன்முட்டை தோன்றியது. அதிலிருந்து பிரம்மதேவன் பிறந்தான் என்று
புராணம் பேசும். அண்டம் முற்றும் ஈன்றானை ஈன்ற சுவணத்தனி அண்டம்
(கடல் தாவு 43)

     ஏ, உம் இவைகள்அசை, அண்டம் ஒத்துளது என்க. தேற்றப்
பொருளும் உம்மைப் பொருளும் ஈண்டு ஒவ்வா.                  (24)