அரக்கர்பெருமித வாழ்வு

4859.

பாடுவார் பலர் என்னின், மற்று அவரினும் பலரால்
ஆடுவார்கள்;மற்று அவரினும் பலர்உளர், அமைதி
கூடுவாரிடைஇன்னியம் கொட்டுவார்; முட்டுஇல்
வீடு காண்குறும்தேவரால் விழு நடம்காண்பார்.

     பாடுவார் பலர்எனின் - பாடலை இசைப்பவர்கள் பலர் என்றால்;
ஆடுவார்கள் - பாடலுக்கேற்றபடி ஆடுகின்றவர்கள்; அவரினும் பலர் -
அவர்களை விடப் பலராவார்; அவரினும் - ஆடுபவர்களினும்; அமைதி -
சமயம் சேர்ந்து பொருந்தி; கூடுவாரிடை - அவையில் கூடியவரிடையே;
இன்னியம் - இசைக் கருவியாகிய தண்ணுமை முதலானவற்றை; கொட்டுவார்
-
கொட்டுபவர்களும்; வீடு காண்குறும் - விடுதலையைக் காண விரும்பும்;
தேவரால் - தேவமங்கையர்களால் (ஆடப்பெறும்); விழுநடம் காண்பார் -
சிறந்த நாட்டியத்தைப் பார்ப்பவர்களும்; பலர் உளர் - பலர் உள்ளார்கள்;

     'பலர் உளர்'என்னும்சொல் இருமுறை பிரித்துக்கூட்டப்பெற்றது. (25)