4860. | வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்; ஆன மாதரோடுஆடுவர் இயக்கியர்; அவரைச் சோனைவார்குழல்அரக்கியர் தொடர்குவர்; தொடர்ந்தால் ஏனை நாகியர்அருநடக் கிரியை ஆய்ந்திருப்பார். |
(நடனக் கொள்கையில்) விஞ்சையர்மகளிர் - வித்தியாதரப் பெண்கள்; வான மாதரோடு இகலுவர் - தேவமகளிருடன் மாறுபட்டு ஆடுவார்கள்; ஆன மாதரோடு - வெற்றியடைந்த விஞ்சை மகளிருடன்; இயக்கியர் ஆடுவர் - இயக்கப் பெண்கள் ஆடுவார்கள்; சோனை வார் குழல் - மேகம் போன்ற கூந்தலைப் பெற்ற; அவரை - அந்த இயக்கப் பெண்களை (மாறுபட்டு); அரக்கியர் - அரக்கப் பெண்கள்; தொடர்குவர் - (ஆடலைத்) தொடர்ந்து மேற்கொள்வார்கள்; தொடர்ந்தால் - வாடாமல் ஆடினால்; ஏனை - மற்றைய;நாகியர் - நாகலோகப் பெண்கள்; அரு - அருமையான; நடக்கிரியை -நாட்டியத்துக்கென்று அமைக்கப்பட்ட கிரியைகளை; ஆய்ந்திருப்பார் -ஆராய்ந்தபடியிருப்பர். கிரியை -செயல். சிலம்பில் பண்ணுக்கு எட்டுக்கிரியைகள் பேசப்பட்டுள்ளன. இது போல் நாட்டியக்கிரியைகள் உண்டு. சோனைவார் குழல் அவரை என்பதைச் சேர்கிறது. அரக்கியர் கூந்தல் மேகம் போன்று இராதே. தொல்காப்பியர் இங்ஙனம் சொல்லை மாற்றுதலை மொழிமாற்று என்பார் (எச்ச - 14) (26) |