4861. | இழையும்ஆடையும் மாலையும் சாந்தமும் ஏந்தி, உழையர்என்னநின்று, உதவுவ நிதியங்கள்; ஒருவர் விழையும்போகமே, இங்கு இது ?வாய்கொடு விளம்பின் குழையும்;நெஞ்சினால் நினையினும் மாசுஎன்று கொள்ளும். |
(அரக்கர்களுக்கு) நிதியங்கள்- நவநிதிகளும்; உழையர் என்ன நின்று - பணியாளர்களைப்போல (ஒதுங்கி நின்று); இழையும் ஆடையும் - ஆபரணங்களையும் ஆடைகளையும்; மாலையும் சாந்தமும் - மாலையையும் சந்தனத்தையும்; ஏந்தி உதவுவ - கைகளில் தாங்கிக் கொடுப்பன; இங்கு - இலங்கையில் (இது); ஒருவர் விழையும் போகம் - ஒருவர் அனுபவிக்கும் போகமாகும்; இது - இந்தப் போகத்தை; வாய்கொடு விளம்பின் - வாயால் எடுத்துக் கூறினால்; குழையும் - (கேட்பவர்களின் உறுதிப்பாடு) தளர்ச்சியடையும்; நெஞ்சினால் நினையினும் - மனத்தால் நினைப்பினும்; மாசு என்று - (என்னுடைய விரதத்துக்கு) குற்றம் என்று; கொள்ளும் - அனுமன் கருதினான். இது அனுமனின்எண்ண ஓட்டம். என்றனன் இலங்கை நோக்கி (42) என்னும் பாடலை நோக்கி (42) அறிக. கடல் தாவு படலத்தில் உள்ள விசும்பிடைச் செல்லும் வீரன் (77) எழுவாய்; என்றனன் பயனிலை. மாசு என்றுகுறித்தான் (25) என்னும் பாடம் ஏற்கலாம் போலும். (27) |