4872.

வள்ளிநுண்மருங்குல் என்ன,
     வானவர்மகளிர், உள்ளம்
தள்ளுற, பாணிதள்ளா
     நடம்புரிதடங்கண் மாதர்,
வெள்ளிய முறுவல்தோன்றும்,
     நகையர்,தாம் வெள்கு கின்றார்-
கள்இசை அரக்கர்மாதர்
     களியிடும்குரவை காண்பார்.

     வள்ளி நுண்மருங்குல் என்ன - கொடியைஒத்த (தம்முடைய)
இடையைப் போல; வானவர் மகளிர் - காணுகின்ற தேவர் மகளிரது;
உள்ளம்தள்ளுற - மனமானது (ஊசல்) ஆடும்படி; தள்ளா - விலக்கப்படாத;
பாணி -தாள ஒழுங்குக்கேற்ப; நடம்புரி - நாட்டியம் ஆடவல்ல;
தடங்கண்மாதர் -நீண்ட கண்களையுடைய தேவமாதர்கள்; கள்இசை -
கள்உண்டு பாடுகின்றஇசையுடைய; அரக்கர் மாதர் - அரக்கப் பெண்களின்;
களியிடும் குரவைகாண்பார் - (முறையற்ற) குரவைக் கூத்தைப் பார்ப்பதற்கு;
வெள்ளியமுறுவல் தோன்றும் - வெண்பற்கள் சிறிதே தெரியும்படி;
நகையர் -புன்னகை செய்தவராய்; வெள்குகின்றார் - நாணம்
அடைகின்றனர்.

    பாணி ஒழுங்கிற்கேற்ப ஆடவல்ல தேவமகளிர்கள் அரக்கியர்களின்
(முறையற்ற) குரவைக் கூத்தைக் காண்பதற்கு நாணம் அடைகின்றனர். பாணி -
தாள ஒழுங்கு. தாம் - உரையசை.                           (38)