4874. | வடங்களும்,குழையும், பூணும் மாலையும்சாந்தும், யானைக் கடங்களும்கலினமா விலாழியும் கணக்குஇலாத இடங்களின்இடங்கள்தோறும் யாற்றொடும் எடுத்தஎல்லாம் அடங்கியதுஎன்னில் என்னே ! ஆழியின்ஆழ்ந்தது உண்டோ ? |
வடங்களும்குழையும் - ஆரங்களும்,குண்டலங்களும்; பூணும் மாலையும் - ஆபரணங்களும் மாலைகளும்; சாந்தும் - சந்தனக் குழம்பும்; யானைக் கடங்களும் - யானைகளின் மும்மதங்களும்; கலின மா - கடிவாளம் பெற்ற குதிரைகளின்; விலாழியும் - வாய் நுரையும் (இன்னும்); கணக்கு இலாத - கணக்கிட முடியாதவையும்; இடங்களின் - வீடுகளின்; இடங்கள்தோறும் - விசாலமான இடப் பரப்புகள் தோறும்; யாற்றொடும் - ஆறுகளாக வந்தனவற்றோடும்; எடுத்த எல்லாம் - எடுத்துக்கொண்டு வந்த எல்லாப் பொருள்களும்; அடங்கியது என்னில் - அடங்கிவிட்டது என்றால்; ஆழியின் ஆழ்ந்தது - கடலினும் ஆழமான நீர்நிலைகள்; உண்டோ - உள்ளதா; என்னோ - என்ன அதிசயம். வடம் முதலியவும்ஆறுகள் கொண்டுவந்தனவும் அடங்கியது என்றால் கடலினும் ஆழமான பொருள் உண்டோ. இலங்கையில் கழித்த பொருள்கள் அடங்குவதால் கடல் பெரியதாம் என்று வியந்து பேசப்பெற்றது. யாறொடு - ஒடு - அசை. இன்றொடு நாளைக் குறுகவரும் கூற்று.... (புறப்பொருள் 270) அன்றி ஒடு உருபை ஆல் உருபாகக் கொள்ளலாம். அப்போது ஆற்றால் எடுக்கப்பெற்ற என்றும் பொருள் கிட்டும். இடம் - வீடு. இடமே பாத்தி ... வீடு என்றிசைப்பர் (திவா - இடப்பெயர்). குப்பை கொட்டும் பள்ளமே கடல் (வை.மு.கோ. உரை) (40) |