4875.

விற்படைபெரிது என்கேனோ ?
     வேற்படைமிகும்என் கேனோ ?
மற்படைஉடைத்தென் கேனோ ?
     வாட்படைவலிது என்கேனோ ?
கற்பணம் தண்டுபிண்டி
     பாலம்என்று இனைய காந்தும்
நற்படை பெரிதுஎன்கேனோ ?
     நாயகற்குஉரைக்கும் நாளில்.

     நாயகற்கு -தலைவனாகிய இராமபிரானுக்கு; உரைக்கும் நாளில் -
தூதுச் செய்தியைக் கூறும் போதில்; (இலங்கை மாநகரில்) வில்படை -
வில்லேந்திய சேனை; பெரிது என்கேனோ - பெரியது என்று கூறுவேனா ?
வேல்படை - வேல் ஏந்திய சேனை; மிகும் என்கேனோ - (விற்படையினும்)
மிக அதிகம் என்று கூறுவேனா ? மற்படை - மற்போர் புரிகின்ற சேனை;
உடைத்து என்கேனோ - மிகுதியானது என்று கூறுவேனா ? வாள்படை -
வாள் ஏந்திய சேனை; வலிது என்கேனோ - வலிமையுடையது என்று
கூறுவேனா ? காந்தும் - நெருப்பை உமிழும்; கற்பணம் தண்டு - கப்பணம்,
தண்டாயுதம்; பிண்டி பாலம் என்று - பிண்டி பாலம் என்று கூறப்பெற்ற;
இனைய காந்தும் நற்படை - இந்த எரிகின்ற ஆயுதங்கள் ஏந்திய சேனை;
பெரிது என்கேனோ - மிகப் பெரியது என்று கூறுவேனா ?

    இராமபிரானுக்குயான், விற்படை, வேற்படை, மற்படை, வாட்படை
என்னும் இவற்றுள் எது சிறந்தது என்று எப்படிக் கூறுவேன், என்று அனுமன்
வியந்தான்.

    பெரிது, மிகும்,உளது, வலிது என்னும் செய்வினை முற்றுகளுக்கிடையே
மற்படை உடைத்து என்னும் செயப்பாட்டு வினை இருப்பது நலம், ஆதலின்
உடைத்து என்னும் பாடத்தினும் உளது என்னும் பாடம் சிறப்புடைத்து.

    உளது -மிகுதியானது, இருப்பைக் குறிக்காமல் மிகுதியைக் குறித்தது.
உளது என்று இறுமாரார் (இரண்டாம் அந்தா). கற்பணம் - கப்பணம். யானை
நெருஞ்சி முள் வடிவமாகச் செய்யப்பெறும் ஆயுதம் - பிண்டிபாலம் -
ஒருவகைப் போர்ப்படை.                                     (41)