4879. | அணங்கு அரா அரசர்கோன் அளவில் ஆண்டுஎலாம் பணங்கிளர்தலைதொறும் உயிர்த்த பாய்விடம் உணங்கலில்,உலகெலாம் முறையின் உண்டுவந்து இணங்குஎரிபுகையொடும் எழுந்ததென்னவே. |
அணங்கு -வருந்துகின்ற; அரா அரசர் கோன் - பாம்புகளின் வேந்தனான ஆதிசேடன்; அளவில் ஆண்டு எலாம் - அளவற்ற ஆண்டு முழுவதும்; பணங்கிளர் தலைதொறும் - படம் விளங்குகின்ற தலைகள் தோறும்; உயிர்த்த - வெளிப்படுத்தி; பாய்விடம் - பரவிய நஞ்சினாலே; உணங்கல்இல் உலகுஎலாம் - கெடுதலில்லாத உலகங்கள் எல்லாவற்றையும்; முறையின் - கிரமப்படி; உண்டு வந்து - விழுங்கியதனால் வந்து; இணங்கு எரி - (எரிக்கும் பொருளொடும் ஒன்றுபட) உண்டாகிய அக்கினி; புகையொடும் - புகையுடன்; எழுந்தது என்ன - பரவியதைப் போல (இருள் பரந்த 47). ஆதிசேடனின்தலைகள் தோறும் வெளிப்பட நஞ்சால் உலகத்தை எரித்த அக்கினி புகையுடன் பரவியதுபோல். உலகம், விடங்கலந்திருத்தலின் அதை எரித்த அக்கி்னி கருநிறம் பெற்றது. அன்றிப் புகையின் மிகுதியால் அக்கினி கறுத்தது என்றும் கொள்க. ஆதிசேடன் உலகத்தை அக்கினியால் எரிப்பான் என்பது மரபு. அரங்கர் சயனமுறக் காற்றுப் புலரும்படி முதல் வீசும் கார் ஆழித்தீச் சுடும் (திருவரங்க மாலை 17). இதுவும் அடுத்த பாடலும் ஒரு தொடர் - எரி எழுந்தது என்ன (46) புகை விரிந்தது என்ன (47) இருள் பரந்த ஆயிடை எனச் சேர்க்க. எழுந்தது,பரவியது, நாமத் தன்மை நன்கலம் படி எழ (பரிபாடல் 15-25). ஏ - அசை. (45) |