4880. 

வண்மைநீங்கா நெடுமரபின் வந்தவன்,
பெண்மை நீங்காதகற்புடைய பேதையை
திண்மைநீங்காதவன் சிறைவைத்தான்எனும்,
வெண்மைநீங்கியபுகழ் விரிந்தது என்னவே.

வண்மை நீங்கா -கொடைப்பண்பிலிருந்து விலகாத; நெடுமரபின்  -
உயர்ந்த குலத்திலே; வந்தவன் - பிறந்த இராவணன்; பெண்மை நீங்காத -
பெண்மைத் தன்மை குறையாத; கற்புடைய - கற்பைப் பெற்றிருக்கும்;
பேதையை
- சீதா பிராட்டியை; திண்மை நீங்காதவன்  - வலிமை
குறையாதஇராவணன்; சிறை வைத்தான் - சிறையிலே அடைத்து விட்டான்;
எனும் -என்று பலரால் பேசப்படும்; வெண்மை நீங்கிய புகழ் - வெள்ளிய
நிறம் நீங்கப்பெற்ற அவப் புகழானது; விரிந்தது என்ன - பரவியது என்று
கூறும்படி (இருள் பரந்த).

    இராவணன்பிராட்டியைச் சிறை வைத்தமையால் வெள்ளிய நிறம் நீங்கப்
பெற்ற புகழ் விரிந்தாற்போல. (இருள் பரந்த) இராவணன் புலத்தியன் மரபில்
பிறந்தவன் ஆதலின் வண்மை நீங்கா நெடுமரபு என்று பேசப்பட்டது. புகழின்
நிறம் வெண்மை என்பது நற்புகழுக்கு ஆகும் - இது அவப்புகழ் ஆதலின்
இருள் நிறமாயிற்று.

     நெடுமரபில்வந்தவன் இராமபிரான் எனப் பொருள் கொண்டு
இராமபிரானுக்கு உரிய பிராட்டியைச் சிறையில் வைத்தவனுடைய வெண்மை
நீங்கிய புகழ் என்று பொருள் கூறினாரும் ஊர் (வை.மு.கோ.) ஏ அசை. (46)