4882. | இந்திரன்வளநகர்க்கு ஏகுவார்; எழில் சந்திரன்உலகினைச் சார்குவார்; சலத்து அந்தகன்உறையுளை அணுகுவார்; அயில் வெந்தொழில்அரக்கனது ஏவல் மேயினார். |
அயில் - வேற்படையுடைய; வெந்தொழில் - கொடுந் தொழிலைச் செய்யும்; அரக்கனது ஏவல் - இராவணனுடைய கட்டளையை; மேயினார் - தலையில் சுமந்த இராக்கத வீரர்கள்; இந்திரன் - இந்திரனுடைய; வளநகர்க்கு ஏகுவார் - வளம் மிக்க நகருக்குச் செல்வார்கள்; எழில் - அழகுமிக்க; சந்திரன் உலகினைச் சார்குவார் - சந்திரனுடைய உலகை அடைவார்கள்; சலத்து - வஞ்சனையால்; அந்தகன் உறையுளை - எமன் தங்கியிருக்கும் உலகத்தை; அணுகுவார் - நெருங்குவார்கள். அரக்கன்ஏவலாளர் இந்திரன் முதலான தேவர்களின் தலைநகரை அடைவார்கள். இராவணனின் ஆணை பரவிய இடம் பேசப்பட்டது. செய்வினைக்குத் தக்க தண்டனை உண்டு என்பதை மெய்ப்பிக்கும் நகரம் அந்தகன் உறையுள். ஆதலின் அங்கு அரக்கர்கள் விரும்பிச் செல்லார். ஆதலின் சலத்து அந்தகன் உறையுளை அணுகுவர் என்று கூறப்பெற்றது. 'சலித்து' என்று பாடம் கொண்டு வெறுத்துச் செல்வர் எனச் சொல்லலும் ஒன்று. (48) |