4890. | அருந்தவன்சுரபியே, ஆதி வான்மிசை விரிந்தபேர்உதயமா, மடிவெண் திங்களா, வருந்தல்இல்பசுங்கதிர் வழங்கு தாரையா சொரிந்தபால்ஒத்தது நிலவின் தோற்றமே. |
அருந்தவன் -அரியதவம் புரிந்த வசிட்டனுக்குரிய; சுரபி - காமதேனு;ஆதி வான் மிசை - கிழக்கு வானத்திலே; விரிந்த - விரிவுபெற்ற; பேர்உதயமா - பெரிய உதய கிரியாகவும்; மடி - அப்பசுவின் மடி;வெண்திங்களா - வெண்மையான பூரண மதியமாகவும்; பசுங்கதிர் - அந்தமதியின் பசுமையான கதிர்கள்; வருந்தல் இல் - வருந்துதல் இல்லாமல் (உவப்புடன்); வழங்கு தாரையா - (அப்பசு) பொழிகின்ற பீர்களாகவும்; நிலவின் தோற்றம் - நிலாவெளிச்சத்தின் காட்சி; சொரிந்த பால் ஒத்தது - எவ்விடத்தும் கொட்டப்பட்ட பால் வெள்ளம் போன்றது. வசிட்டனுக்குஉரிய காமதேனு உதயமலையாகவும், அப்பசுவின் மடி பூரணச் சந்திரனாகவும் சந்திரனின் கதிர்கள் பசு பொழிகின்ற பீர்களாகவும் அந்த நிலாவின் வெளிச்சம் எங்கும் சொரிந்த பாலாகவும் பேசப்பட்டன. உதயகிரி - பசு.திங்கள் மடி - கதிர் - பீர். நிலவு - வெள்ளம் உதயம் - உதயகிரி. முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் (ஆரண் - அயோமுகி 30) ஆதிவான் - சூரியன் உதிக்கும் வானம். ஆதிவான் - அந்திவான் - ஒப்பிடுக. (56) |