4893. | வீசுறு பசுங்கதிர்க் கற்றை வெண்நிலா ஆசுற எங்கணும்நுழைந்து அளாயது காசுஉறு கடிமதில்இலங்கைக் காவல்ஊர்த் தூசு உறையிட்டதுபோன்று தோன்றிற்றே. |
வீசுறும் -திசைகள்தோறும் பரப்புகின்ற; பசும் - பசுமையான; கதிர்கற்றை - கிரணத் தொகுதிகளையுடைய; வெண்நிலா - வெண்மையான சந்திரன்; ஆசு உற - வேகமாக; எங்கணும் - எல்லா இடங்களிலும்; நுழைந்து அளாயது - புகுந்து கலந்திருப்பது; காசு உறு - மணிகள் பதித்த; கடிமதில் - விளக்கமான மதில்களால்; காவல் - காக்கப் பெறுகின்ற; இலங்கை ஊர் - இலங்கை நகருக்கு; தூசு - வெண்மையான மெல்லிய ஆடையால் (அமைந்த); உறையிட்டது போன்று தோன்றிற்று - போர்வை இட்டாற்போலக் காட்சி தந்தது. வெண்ணிலாஎங்கணும் புகுந்து கலந்திருப்பது வெள்ளைப் போர்வையை இலங்கைக்குப் போர்த்தினாற் போன்றிருந்தது. பசும் -குளிர்ந்த, பசுநிலா விரிந்த பல்கதிர் மதி (அகம்.57) தூசு - வெள்ளாடை. ஏ. அசை. (59) |